வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் குடியேறும் போராட்டம்


வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2019 4:15 AM IST (Updated: 10 Sept 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே ஆட்டுக்காரம்பட்டியில் வீட்டுமனை பட்டா வழங்ககோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள ஆட்டுக்காரம்பட்டியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டுமனைகள் வழங்குவதற்காக அருகே சுமார் 3 ஏக்கர் நிலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அந்த இடத்தில் 90 குடும்பங்களுக்கு வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்து பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த பகுதிமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஆட்டுக்காரம்பட்டியில் அருந்ததியர் சமூக மக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திற்கு குடும்பங்களுடன் சென்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது வீட்டுமனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். எனவே மேற்கண்ட இடத்தில் விரைவாக வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்து அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும். அந்த பகுதியில் தனிநபர் செய்துள்ள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக போராட்டம் நடத்தியவர்களின் பிரதிநிதிகளிடம் உதவி கலெக்டர் சிவன்அருள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வீட்டுமனை தொடர்பான கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். விரைவில் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று குடியேறும் போராட்டத்தை கைவிட்ட அந்த பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் நேற்று பகல் முதல் மாலை வரை பரபரப்பு ஏற்பட்டது.

Next Story