முக்கொம்பில் இருந்து, கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் திறப்பு - சலவை தொழிலாளர்களின் குடிசைகள் மூழ்கின
முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், சலவை தொழிலாளர்களின் குடிசைகள் மூழ்கின.
ஜீயபுரம்,
கர்நாடக மாநிலம் அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையை அடைந்து முக்கொம்பு மேலணையை அடைந்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இதனால், வெள்ள அபாயத்தை தவிர்க்க காவிரியில் 32 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மீதமுள்ள தண்ணீர் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் அணையின் மீதம் உள்ள மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், நேற்று காவிரி ஆற்றில் 56,200 கனஅடி தண்ணீர் வந்ததை தொடர்ந்து கொள்ளிடத்தில் 20 ஆயிரம் கன அடியும், காவிரியில் 35 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மேலும், வாய்க்கால் பாசனத்திற்காக 1,200 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் விடப்பட்ட தண்ணீரை விட நேற்று அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரியும், கொள்ளிடமும் கடல் போல காட்சி அளிக்கிறது.
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கிறார்கள். சிலர் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் அங்கேயே குடிசை அமைத்து சலவை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் வந்ததால் அந்த குடிசைகள் மூழ்கின. கொள்ளிடம் ஆற்றில் சலவை செய்யும்போது அந்த துணி ‘பளிச்‘ என்று இருக்கும். இதனால், கொள்ளிடம் சலவைக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.
தற்போது சலவை தொழிலாளர்களின் குடிசைகள் நீரில் மூழ்கி உள்ளதால் அவர்கள் சலவை செய்வதற்காக வாங்கி வைத்திருந்த துணிகள் துவைக்க முடியாமல் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கின்றன. இதனால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் அதிகளவு செல்வதால் தீயணைப்பு வாகனங்கள், மீட்பு கருவிகள் மற்றும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
Related Tags :
Next Story