பண்ருட்டியில், தறிகெட்டு ஓடிய லாரி மோதி முதியவர் பலி - வங்கி ஊழியர்கள் உள்பட 5 பேர் படுகாயம்


பண்ருட்டியில், தறிகெட்டு ஓடிய லாரி மோதி முதியவர் பலி - வங்கி ஊழியர்கள் உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Sep 2019 11:00 PM GMT (Updated: 9 Sep 2019 8:28 PM GMT)

பண்ருட்டியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி முதியவர் பலியானார். வங்கி ஊழியர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பண்ருட்டி,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அடசல் கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் ராமச்சந்திரன்(வயது 37). டிரைவரான இவர், நேற்று மாலை கண்டரக்கோட்டை மணல் குவாரியில் இருந்து லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் நோக்கி புறப்பட்டார்.

பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகில் வந்தபோது திடீரென லாரியில் பிரேக் கட்டாகி தறிகெட்டு ஓடியது. லாரியை நிறுத்த முடியாமல் டிரைவர் ராமச்சந்திரன் தவித்தார். அப்போது எதிரே விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி பஸ் நிலையத்துக்குள் செல்வதற்காக சிக்னலில் அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ் மீது மோதாமல் இருக்க ராமச்சந்திரன் வலது புறமாக லாரியை திருப்பினார்.

அப்போது அந்த வழியாக சென்ற கார் மீது லாரி மோதியது. இதில் அந்த லாரியின் முன்பக்கத்தில் கார் சிக்கியது. இருப்பினும் லாரி நிற்காமல் காரை வெகு தூரம் இழுத்துச்சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ராஜதீபனை நோக்கி லாரி சென்றது. ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதற்கிடையே தட்டாம்பாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் (65) அந்த வழியாக நடந்து சென்றார். அவர் மீது லாரி மோதியது. அவரையும் லாரி இழுத்துக்கொண்டே, மோட்டார் சைக்கிளில் வந்த வங்கி ஊழியர்கள் பாரதிநகர் ஜெயராமன் மகன் ஜெயக்குமார் (24), ஒறையூர் மண்ணாதன் மகன் ராஜீவ்காந்தி (32), அடுத்தடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த திராசு கிராமத்தை சேர்ந்த பரமானந்தம்(37), திருவதிகை சிவக்குமார் (47) ஆகியோர் மீதும் மோதியபடி சென்றது.

இதனால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதைத்தொடர்ந்து காருக்குள் இருந்த டிரைவர் பூங்குணத்தை சேர்ந்த காமராஜ் (37) தனது வண்டியில் உள்ள பிரேக்கை வேகமாக அழுத்தினார். இதில் காருடன் சேர்ந்து லாரியும் நின்றது.

இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் இருந்த டிரைவர் காமராஜை மீட்டனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயக்குமார், ராஜீவ்காந்தி, பரமானந்தம், சிவக்குமார் ஆகியோரும் காயமடைந்தனர். ஆனால் லாரியில் சிக்கி படுகாயமடைந்த ரெங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து காயமடைந்த காமராஜ் உள்பட 5 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடம் பண்ருட்டி முக்கிய சாலை என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போக்குவரத்தை சீரமைத்தனர். முன்னதாக விபத்தில் இறந்த ரெங்கநாதன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ராமச்சந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story