7 மாவட்டங்களில் சாலையோரம் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு


7 மாவட்டங்களில் சாலையோரம் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 10 Sept 2019 4:00 AM IST (Updated: 10 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சாலையோரம் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம், தமிழ்நாடு விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட குழுவினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூரு-தேவனகொந்தி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விளை நிலங்களின் வழியாக புதியதாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தவும், இந்த திட்டம் ஏற்கனவே அமைந்துள்ள கொச்சி-கரூர் பெட்ரோ நெட் எண்ணெய் குழாய் திட்டத்தையொட்டியே திருப்பூர் மாவட்டம் அலகுமலை வரை எடுத்து வந்து, பின்னர் தனியாக பிரித்து மேற்படி மாவட்டங்களின் வழியாக விவசாய நிலத்திற்குள் அமைக்கவும் மத்திய அரசு அறிவிப்பு செய்து, அதற்கான முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் பல்லடம் தாலுகா அழகுமலை, கண்டியன் கோவில், காங்கேயம் தாலுகாவில் படியூர், சிவன்மலை, கீரனூர், மறவாபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இத்திட்டத்திற்கு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை, நெல், கரும்பு, மஞ்சள், தக்காளி, கத்திரி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். வேம்பு, புங்கன், வாவை, வெள்ளைவேலான் உள்ளிட்ட மரங்களும் வளர்ந்து நிற்கின்றது.

திட்டத்தை நிறைவேற்றும் போது சாகுபடி செய்துள்ள அனைத்து பயிர்களையும் அழித்துவிடுவார்கள். குழாய் அமைத்த பின்பு தென்னை, மா போன்ற மரப்பயிர்கள் வளர்க்க கூடாது. குடியிருப்புகள், சாலைகள், கோழிப்பண்ணைகள், ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்ட எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது. கனரக எந்திரங்கள் பயன்படுத்த கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்படும்.

உயர்மின்கோபுர திட்டங்கள், சாலை விரிவாக்க திட்டங்கள், மேற்கு மாவட்ட விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த திட்டம் வருவதாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக விவசாயிகளின் நிலவுரிமையை பாதுகாக்கும் வகையிலும், விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் வலுவான ஆட்சேபனை தெரிவிப்பதையும் கணக்கில் எடுத்து கொண்டும், விவசாயிகளின் விளை நிலங்களில் செயல்படுத்துவதற்கு மாற்றாக, சாலையோரகங்களிலோ, மாற்று வழியிலோ கொண்டு சென்று விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்.

7 மாவட்டங்களில் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஐ.டி.பி.எல். திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story