நாகர்கோவில் அருகே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பெண் என்ஜினீயர் தற்கொலை


நாகர்கோவில் அருகே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பெண் என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Sept 2019 4:00 AM IST (Updated: 10 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே பெண் என்ஜினீயர் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவை தேடியுள்ளார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி வெள்ளாளன்விளை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகள் நிவேதா (வயது 23), என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் அரசு வேலைக்காக பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதினார். எனினும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

அதே சமயத்தில், கடந்த மாதம் 31-ந் தேதி நிவேதாவுக்கு பொழிக்கரை தபால் நிலையத்தில் தபால்களை பட்டுவாடா செய்யும் வேலை கிடைத்தது. நிவேதாவுக்கு வேலை கிடைத்ததால் அவருடைய பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நிவேதாவுக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. பெற்றோர் வற்புறுத்தியதால் அவர் தபால் நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் 3-ந் தேதி முதல் நிவேதா, வீடுகளுக்கு தபால்களை பட்டுவாடா செய்து வந்தார். இதற்காக தினமும் காலையில் துரைசாமி, தன்னுடைய மகள் நிவேதாவை வேலைக்கு அழைத்துச் சென்றார்.

நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நிவேதா வீட்டில் இருந்தார். அப்போது, என்ஜினீயரிங் படித்த எனக்கு, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று கூறி அவர் பெற்றோரிடம் வருத்தப்பட்டார். மேலும் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தார். எனினும் பெற்றோர் அவரை தேற்றினர்.

நேற்று காலை 9.30 மணி அளவில் துரைசாமி மகளை வேலைக்கு புறப்படுமாறு கூறி விட்டு வெளியே சென்றார். அதை தொடர்ந்து நிவேதா துணிகளை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் குளியல் அறையை விட்டு வெளியே வரவில்லை. உடனே, குடும்பத்தினர் அறையின் கதவை தட்டி வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால், சத்தம் எதுவும் இல்லை.

இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நிவேதா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன் ஆகியோர் விரைந்து சென்று நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலை கிடைத்த சில நாட்களில், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story