தனியார் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தர்ணா போராட்டம்


தனியார் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2019 3:45 AM IST (Updated: 10 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செம்மாண்டம்பாளையம் அனந்தபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் நவீன்குமார் (வயது 22). விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 8-ந் தேதி சோமனூர் அருகே சாலைவிபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 5-ந் தேதி நவீன்குமாரின் உறவினா்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்குமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு அவர்கள், சிகிச்சைக்கு செலவாகும் தொகையை கடன் வசதி மூலம் பெறலாம் என்று கூறியதாக தெரிகிறது. எனவே அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி கடன் வசதி கிடைக்க வில்லை என்றும், சிகிச்சைக்குரிய பணத்தை செலுத்தி கூறி விட்டு நவீன்குமாரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளனா்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினா்கள் அவா்கள் கேட்ட பணத்தை செலுத்திவிட்டு நவீன்குமாரை 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து அவரின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து உரிய சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினா்கள் நவீன்குமாரின் உடலை வாங்க மறுத்து கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் திருப்பூர் 15.வேலம்பாளையம் போலீசார் விரைந்து வந்துபோராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நவீன்குமாரின் உடலை உறவினர்கள் வாங்க வில்லை.

Next Story