தஞ்சை பழைய பஸ் நிலையத்தில், கடைகளின் முன்பு அமைக்கப்பட்ட கம்பிவேலியை அகற்றாவிட்டால் போராட்டம்


தஞ்சை பழைய பஸ் நிலையத்தில், கடைகளின் முன்பு அமைக்கப்பட்ட கம்பிவேலியை அகற்றாவிட்டால் போராட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2019 4:15 AM IST (Updated: 10 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் கடைகளின் முன்பு அமைக்கப்பட்ட கம்பிவேலியை உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையம் கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை எதிரே உள்ள தற்காலிக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து பழைய பஸ் நிலையத்தை சுற்றி இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டது. மேலும் பஸ் நிலைய பகுதியில் இருந்த கடைகளின் முன்பும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வணிகர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தஞ்சை வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கம்பிவேலியை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார்.

அவருடன் மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், பொருளாளர் வாசுதேவன், மாநில துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் வெள்ளையன் தஞ்சை பழைய பஸ் நிலைய பகுதிக்கு வந்து கம்பி வேலி அமைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டார். அப்போது அவர் தலைமையில் வணிகர்கள், திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பழைய பஸ் நிலையத்தை மூடிவிட்டு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வணிகர்கள் வரவேற்கிறார்கள். எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் நிதானம் தேவை. பழைய பஸ் நிலையத்தை சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் மின் இணைப்பை துண்டிக்க முடிவு செய்துள்ளனர். வணிகர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என கூறியதன் பேரில் மின் இணைப்பு துண்டிக்கும் செயலை கைவிட்டுள்ளனர்.

தீபாவளி முடிந்த பிறகாவது தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருக்கலாம். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதற்கு மேலாக பழைய பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலி அமைத்தால் பொதுமக்கள் எப்படி கடைக்கு வருவார்கள். எனவே உடனடியாக கம்பி வேலியை அகற்ற வேண்டும். அப்படி அகற்றாவிட்டால் பெரிய அளவில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம். அதில் நானும் கலந்து கொள்வேன்.

பழைய பஸ் நிலையத்தில் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் இங்கு ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு அதே இடத்தில் கடை கட்டிக் கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும். அதுவரை வியாபாரிகளுக்கு மாற்று இடமாக திலகர் திடல் அல்லது கீழ அலங்கத்தில் ஒரு இடத்தில் கடை அமைத்து கொடுக்க வேண்டும். அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது சிறு வியாபாரிகளுக்கு எதிரானதாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story