ரெட்டியார்சத்திரம் அருகே, குடிநீர் கேட்டு 2 இடங்களில் சாலை மறியல்


ரெட்டியார்சத்திரம் அருகே, குடிநீர் கேட்டு 2 இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Sept 2019 4:15 AM IST (Updated: 10 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

ரெட்டியார்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு 2 இடங்களில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னிவாடி,

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட டி.பண்ணைப்பட்டி ஊராட்சியில் சந்தமநாயக்கன்பட்டி, டி.பண்ணைப்பட்டி, தெத்துப்பட்டி உள்பட 6 குக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் கிராமமக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த டி.பண்ணைப்பட்டி கிராம மக்கள் நேற்று காலை 9.30 மணி அளவில் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கன்னிவாடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையே தங்கள் பகுதிக்கும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறி தெத்துப்பட்டி கிராம மக்களும் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர் தண்ணீரை முறையாக திறந்து விடுவதில்லை. மேலும் பெரும்பாலானோர் வீடுகளில் பெரிய அளவிலான தண்ணீர் தொட்டிகள் அமைத்துள்ளனர். இவற்றிற்கு மோட்டார் மூலம் தண்ணீர் திருடி நிரப்பிக்கொள்கின்றனர். இதனால் பிற பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கிறது என்று கிராமமக்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். குடிநீர் கேட்டு அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story