திருச்செந்தூர் அருகே, காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மர்ம சாவு
திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக, ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சந்தனகுமார் (வயது 28). இவர் சென்னை அயனாவரம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பூச்சிக்காட்டை சேர்ந்த லிங்கஜோதியும் (25) காதலித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணத்துக்கு பின்னர் இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்கஜோதி தன்னுடைய பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தனகுமார் தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக பூச்சிக்காட்டில் உள்ள மாமனாரின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனே அவருக்கு திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சந்தனகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே, சந்தனகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள், சந்தனகுமாரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட போலீஸ்காரர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story