கணவர் கண் முன்னே துணிகரம்: அரசு பெண் என்ஜினீயரிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு


கணவர் கண் முன்னே துணிகரம்: அரசு பெண் என்ஜினீயரிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 10 Sept 2019 4:00 AM IST (Updated: 10 Sept 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே, கணவர் கண் முன்னே அரசு பெண் என்ஜினீயரிடம் 12 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி சுபத்ரா (வயது 42). இவர், திருச்சியில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்திற்கு கணவர்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஜீயபுரம் திண்டுக்கரை அருகே உள்ள வளைவு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து பின்தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் திடீரென்று சுபத்ராவின் கழுத்தில் அணிந்திருந்த தாலிசங்கிலி மற்றும் தங்கசங்கிலி என 12 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசில் சுபத்ரா புகார் செய்தார்.

அதன்பேரில், ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி வழக்குப்பதிவு செய்து அரசு பெண் அதிகாரியிடம் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

கணவர் கண் முன்னே நடைபெற்ற இந்த துணிகர சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story