பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: குடும்பத்தினருடன் முதியவர் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் முதியவர் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு முதியவர் தனது குடும்பத்தினருடன் ஓடி வந்து திடீரென்று மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றி, அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க வைத்தனர். இதையடுத்து அந்த முதியவரிடம் எதற்காக தீக்குளிக்க முயற்சித்தனர் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த முதியவர் தெரிவித்தாக போலீசார் கூறியதாவது:-
தீக்குளிக்க முயன்றவர் பெரம்பலூர் தாலுகா வடக்கு மாதவி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரையை சேர்ந்த பிச்சைபிள்ளை(வயது 66) என்பதும், விவசாயியான இவருடன் அவரது மனைவி ராஜகுமாரி மற்றும் மகன் கண்ணன் குடும்பத்தினர், மகள் மகேஸ்வரி குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. பிச்சைபிள்ளை தனது மகன், மகள் குடும்பத்தினருடன் கீழக்கரையில் உள்ள தனது 3 ஏக்கர் விவசாய நிலத்தில், கொட்டகை போட்டு வசித்து, விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிச்சைபிள்ளை விவசாய நிலத்திற்கு எதிரே ஒருவர் புதிதாக நிலம் வாங்கியுள்ளார். அந்த நபர் பிச்சைபிள்ளை, அவரது குடும்பத்தினர் விவசாய நிலங்களுக்கு சென்று வரும் புறம்போக்கு வழிப்பாதையை ஆக்கிரமித்து உள்ளாராம்.
இதனால் பிச்சைபிள்ளை தங்களது விவசாயி நிலங்களுக்கு சென்று வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து பிச்சைபிள்ளை மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்ைலயாம். மேலும் வழிப்பாதையை ஆக்கிரமித்த அந்த நபரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பிச்சைபிள்ளையை தகாத வார்த்தையால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனராம். வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பிச்சைபிள்ளை தனது மனைவி, மகன், மகள் குடும்பத்தினருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முடிவடைவதற்குள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே அடுத்த சம்பவமாக ஆண் ஒருவர் தனது மகள், மகனுடன் வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.
பொதுமக்கள் கூட்டத்திற்குள் இருந்த அந்த நபர் திடீரென்று தனது உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தனது மகள், மகன்களை கையில் பிடித்தவாறு ஓடி வந்தார். பின்னர் தீக்குளிப்பதற்காக தீக்குச்சியை பற்ற வைக்க முயன்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். சக போலீசார் குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அந்த நபரின் மேல் ஊற்றினர். பின்னர் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் வேப்பந்தட்டை தாலுகா பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்கிற அப்துல் அஜீஸ்(38) என்பதும், அவர் தனது மகள் ஜெனீபா(12), மகன் முகமது ரபீக்(7) தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. அப்துல் அஜீசுக்கு, அவருடைய கிராமத்தில் உள்ள சொந்தமான நிலத்தை, அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது பெயரில் பட்டா மாற்றி கொண்டாராம்.
இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும் இதற்காக அப்துல் அஜீஸ் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் தான் அப்துல் அஜீஸ் தனது மகன், மகளுடன் வந்து தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பிச்சைபிள்ளை மற்றும் அப்துல் அஜீஸ் ஆகியோரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சைகளை அளித்து விட்டு, பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story