மறுசீரமைப்பு செய்து அறிவிக்கும்வரை, பொதுமக்களிடம் கூடுதலாக வரி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்


மறுசீரமைப்பு செய்து அறிவிக்கும்வரை, பொதுமக்களிடம் கூடுதலாக வரி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 10 Sept 2019 4:00 AM IST (Updated: 10 Sept 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

வரி மறுசீரமைப்பு செய்து அறிவிக்கும் வரை பொதுமக்களிடம் கூடுதலாக வரி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். திருச்சியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி, 

மாநகராட்சிகளில் வீட்டுவரி கூடுதலாக உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். கடைசியாக கடந்த 2008-09-ம் ஆண்டு தான் வரி உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு வந்தபோது, கூடுதலாக வரி வசூலித்தால் மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய முடியும் என்று எடுத்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் வரி வசூல் செய்வதை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. நீண்டகாலமாக வரி உயர்த்தப்படாமலேயே இருந்து வந்தது. ஆனால் சில இடங்களில் கூடுதலாக வரி வசூல் செய்வதை மாற்றி அமைத்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரேசீராக வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து வரி மறுசீரமைப்பு செய்து அறிவிக்கும் வரை யாரும் கூடுதலாக வரி வசூல் செய்யக்கூடாது என்று கூறி இருக்கிறோம். அப்படி பொதுமக்களிடம் கூடுதல் வரி வசூல் செய்தால் நடவடிக்கை எடுப்போம்.

கஜா புயல் பாதிப்பின்போது ஒரு மாதகாலம் டெல்டா பகுதிகளில் தங்கி இருந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தோம். அப்போது நாகை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, 2018-19 தன்னிறைவு திட்டத்தின் கீழ் நாகையில் ரூ.34 கோடியே 30 லட்சம் செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.

இந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டால் 5 ஆயிரம் மீனவர்கள், 782 நாட்டு படகுகள், 64 மின்சார படகுகள் பயன்பெறும். திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமைப்பது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். 3 இடங்களை தேர்வு செய்யப்பட்டு பரிசீலனை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் உள்ளிட்ட மழைக்காலங்களில் நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 63 ஆயிரம் களப்பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். டெங்குவால் ஒரு உயிரிழப்புக்கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது” என்றார்.

முன்னதாக திருச்சி கலையரங்கத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடந்தது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். அப்போது மழைநீர் சேகரிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பராமரிக்கும் கையேட்டினை வெளியிட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மழைநீர் சேகரிப்பு பணிகள் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இந்த குழுக்கள் பொதுமக்களுக்கு வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த ஆலோசனை வழங்குவார்கள். மழைநீர் சேகரிப்பு அமைப்பை சரியான முறையில் செய்தாலே 60 சதவீத பிரச்சினை தீர்ந்துவிடும். கடந்த 2001-ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். இப்போது மக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நேரத்தில் அதை உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும். குடிமராமத்து திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்த 3 மாதகாலம் அவகாசம் கொடுத்து இருக்கிறோம். அதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். 3 மாதத்தில் அமைக்காவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 34 நீர்நிலைகள் சமூக பொறுப்பு நிதியின் மூலம் புனரமைக்க 12 தனியார் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமைச்சர் வேலுமணி வழங்கினார். முன்னதாக திருச்சி கே.கே.நகர் பெரியார்நகரில் ரூ.82 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவின் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. அமைச்சர் வேலுமணி பூங்காவை திறந்து வைத்து பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும், அங்குள்ள வசதிகளையும் சுற்றி பார்த்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், நகராட்சி நிர்வாக ஆணையர்(பொறுப்பு) பாஸ்கரன், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன், பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிசாமி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் செல்வராஜ்(முசிறி), ஜெய.ராமலிங்கம்(ஜெயங்கொண்டம்), தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ரத்தினவேல் (புறநகர்), குமார் (மாநகர்) மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story