“உப்பள தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க வலியுறுத்துவோம்” - கனிமொழி எம்.பி. பேட்டி


“உப்பள தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க வலியுறுத்துவோம்” - கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 10 Sept 2019 4:00 AM IST (Updated: 10 Sept 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

“உப்பள தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்“ என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி,

தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று தூத்துக்குடி சத்யாநகர் பகுதிக்கு வந்தார். அங்குள்ள உப்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், உப்பளங்களில் பணியாற்றும்போது வாய்க்கால்களில் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் மருத்துவ செலவு, விபத்துக்கான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவற்றை கனிவுடன் கேட்டறிந்த கனிமொழி எம்.பி., கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சில நாட்களுக்கு முன்பு உப்பள தொழிலாளர்கள் எங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்து கூறினார்கள். அதுமட்டுமின்றி நேரடியாக வந்து, உப்பளத்தில் அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பேரில் உப்பளத்துக்கு வந்து அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பதை நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டோம். மழைக்காலங்களில் நிவாரணம் வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை உப்பள தொழிலாளர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் அது கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக உப்பள தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம் என்ற வாக்குறுதியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்து உள்ளார். அதனை தொழிலாளர்களிடம் எடுத்து கூறி உள்ளேன். இங்கு வேலை செய்யும் பெண்களுக்கு அடிப்படை வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். உப்பள தொழிலாளர்கள் பயன்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் ஏற்கனவே 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. அதன்மூலம் எந்த அளவுக்கு முதலீடு வந்தது என்று ஒரு தெளிவான அறிக்கையை அரசு தரட்டும். அதன்பிறகு முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் பயன் என்ன? என்று எங்களுக்கு தெளிவாக விளக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story