‘பப்ஜி’ விளையாட கூடாது என கண்டித்ததால்: ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தலை துண்டித்து படுகொலை - மகன் கைது


‘பப்ஜி’ விளையாட கூடாது என கண்டித்ததால்: ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தலை துண்டித்து படுகொலை - மகன் கைது
x
தினத்தந்தி 9 Sep 2019 11:40 PM GMT (Updated: 9 Sep 2019 11:40 PM GMT)

பெலகாவியில் ‘பப்ஜி’ விளையாட கூடாது என கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன், ஓய்வு பெற்ற போலீஸ்காரரான தனது தந்தையை தலை துண்டித்து படுகொலை செய்த பயங்கர நடந்துள்ளது. வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) புறநகர் காகதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சித்தேஷ்வரா நகரை சேர்ந்தவர் சங்கரப்பா கும்பாரா (வயது 60). இவரது மனைவி சாகரா. இந்த தம்பதியின் மகன் ரகுவீர் கும்பாரா (21). பெலகாவி நகர ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றிய சங்கரப்பா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றிருந்தார். ரகுவீர், டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்தார். மேலும் எந்த நேரமும் செல்போனில் ‘பப்ஜி’ விளையாட்டை அவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதுபற்றி சங்கரப்பாவுக்கு தெரியவந்துள்ளது.

உடனே அவர், செல்போனில் ‘பப்ஜி’ விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல முயற்சி எடுக்கும்படி மகன் ரகுவீரிடம் கூறி வந்துள்ளார். ஆனால் தந்தை சொல்வதை கேட்காமல் எந்த நேரமும் செல்போனில் ‘பப்ஜி’ விளையாடுவதை ரகுவீர் வாடிக்கையாக வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலையிலும் வீட்டில் இருந்து ரகுவீர் தனது செல்போனில் ‘பப்ஜி’ விளையாடி உள்ளார். உடனே அவரிடம், ‘பப்ஜி’ விளையாடுவதை விட்டு வேலைக்கு செல்லும்படி அறிவுரை கூறியுள்ளார். இதனால் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் உண்டானது.

பின்னர் திடீரென்று ஆத்திரமடைந்த ரகுவீர், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை கற்களால் தாக்கி உடைத்துள்ளார். இதுபற்றி காகதி போலீசில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் புகார் அளித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து ரகுவீரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து நேற்று முன்தினம் இரவு ரகுவீரை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, பெற்றோருடன் சேர்ந்து ரகுவீர் சாப்பிட்டுள்ளார்.

பின்னர் சங்கரப்பா, அவரது மனைவி அறையில் படுத்து தூங்கி விட்டனர். இதற்கிடையில், நள்ளிரவு 12 மணியளவில் சங்கரப்பா எழுந்த போது ரகுவீர் தனது செல்போனில் ‘பப்ஜி’ விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த சங்கரப்பா தனது மகனிடம் ‘பப்ஜி’ விளையாடதே என்று கண்டித்துள்ளார். பின்னர் அவர் படுத்து தூங்கி விட்டார்.

இந்த நிலையில், அதிகாலை 4.30 மணியளவில் தூங்கி கொண்டிருந்த தாய் சாகராவை எழுப்பிய ரகுவீர், அவரை வீட்டின் மற்றொரு அறைக்குள் தள்ளி வெளிப்புறமாக கதவை பூட்டியதாக தெரிகிறது. அதன்பிறகு, தூங்கி கொண்டிருந்த தனது தந்தை சங்கரப்பாவை அரிவாளால் சரமாரியாக ரகுவீர் வெட்டியதாக தெரிகிறது. இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.

அப்படி இருந்தும் ஆத்திரம் தீராத ரகுவீர், தந்தையின் தலையையும், ஒரு காலையும் துண்டாக வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்துள்ளனர். அப்போது சங்கரப்பா ரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

இதுபற்றி அறிந்ததும் காகதி போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சங்கரப்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் வீட்டின் மற்றொரு அறைக்குள் இருந்த சாகராவையும் போலீசார் மீட்டனர். மேலும் ரகுவீரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ‘பப்ஜி’விளையாட்டுக்கு ரகுவீர் அடிமையாகி இருந்ததும், இதனால் எந்த நேரமும் செல்போனில் ‘பப்ஜி’ விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இதனால் ‘பப்ஜி’ விளையாட கூடாது என சங்கரப்பா கூறியதால், தந்தை என்று கூட பார்க்காமல் அவரை ரகுவீர் துண்டு, துண்டாக வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து காகதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான ரகுவீரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படுகொலை சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story