உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி, 4 சிறுவர்களின் போலீஸ் கமிஷனராகும் ஆசை நிறைவேற்றம்


உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி, 4 சிறுவர்களின் போலீஸ் கமிஷனராகும் ஆசை நிறைவேற்றம்
x
தினத்தந்தி 9 Sep 2019 11:44 PM GMT (Updated: 9 Sep 2019 11:44 PM GMT)

உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி, 4 சிறுவர்கள் போலீஸ் கமிஷனராக ஆக வேண்டும் என்ற ஆசையை நேற்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிறைவேற்றி வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுமி, 4 சிறுவர்கள் போலீஸ் கமிஷனராக ஆக வேண்டும் என்ற ஆசைப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தனியார் தொண்டு நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது. இதையடுத்து, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, 4 சிறுவர்களின் ஆசையை நிறைவேற்ற போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் முடிவு செய்திருந்தார்.

இதையடுத்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீவாணி பாத்யா (வயது 8), அப்ராத் பாட்ஷா(7), முகமது சாகித்(10), சையத் இமாத்(6), ரூதன்குமார் (8) ஆகிய 5 பேரும், அவர்களது பெற்றோருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தனர். அந்த சிறுமி, சிறுவர்களுக்கு போலீஸ் சீருடை அணிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் வளாகத்தில் வைத்து அவர்கள் 5 பேருக்கும், போலீஸ் கமிஷனருக்கு அளிக்கப்படும் அணிவகுப்பு மரியாதையை போலீசார் செலுத்தினார்கள்.

அதன்பிறகு, 5 பேரும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தனது இருக்கையில் சிறுமி, சிறுவர்களை போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அமரவைத்தார். மேலும் ஒவ்வொருவரிடமும் போலீஸ் கமிஷனராக பதவி ஏற்க செய்ததுடன், அவர்களிடம் போலீஸ் கமிஷனருக்கான அதிகாரத்தை பாஸ்கர்ராவ் வழங்கினார். மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 5 பேரையும் அழைத்து சென்று, அங்கு கட்டுப்பாட்டு அறையில் தினமும் நடைபெறும் பணிகள் குறித்து போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், சக போலீசார் விளக்கம் அளித்தனர்.

இதன் மூலம் போலீஸ் கமிஷனராக ஆக வேண்டும் என்ற தங்களது ஆசை நிறைவேறியதால் சிறுமி மற்றும் சிறுவர்கள் உற்சாகமும், சந்தோஷமும் அடைந்தனர். அவர்களது பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் முறையாக சிறுமி, சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

“புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுமியும் தாங்கள் போலீஸ் கமிஷனராக வேண்டும் என்று கனவும், ஆசையும் கொண்டு இருந்தனர். அவர்கள் பற்றி தகவல் எனக்கு கிடைத்தது. இதனால் அவர்களை ஆசைகளை நிறைவேற்ற முடிவு செய்தேன். சிறுமி உள்பட 5 பேரும் போலீஸ் கமிஷனராக தங்களை நினைத்து கொண்டதால் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

இதன் மூலம் அந்த சிறுவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குழந்தைகளால் வேதனை அடைந்திருந்த பெற்றோரும் சந்தோஷம் அடைந்துள்ளனர். பெற்றோர் தைரியமும், ஊக்கமும் அடைந்துள்ளனர்“. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story