மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும் - அமைச்சர் கந்தசாமி தகவல்


மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும் - அமைச்சர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 10 Sept 2019 6:14 AM IST (Updated: 10 Sept 2019 6:14 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வரும்வரை இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் இலவச அரிசி வழங்க அமைச்சரவையிலும், சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துடன் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து தீர்மானத்தை கொடுத்து அரிசி வழங்க ஒப்புதல் கொடுக்க வலியுறுத்தினார்கள்.

இந்த விவகாரத்தில் கவர்னர், அமைச்சரவை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இதுதொடர்பான கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். இறுதி முடிவு வரும் வரை அரிசிக்கு பதிலாக பணமாகவே பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தற்காலிகமாக அரிசிக்கு பதிலாக பணம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-

புதுவை மக்களுக்கு இலவச அரிசி வழங்க அமைச்சரவையிலும், சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் அதற்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை.

வருகிற 16-ந்தேதி நான், முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் டெல்லி செல்கிறோம். அப்போது உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து மக்களுக்கு அரிசி தரவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

மத்திய அரசு அரிசி வழங்க அனுமதி வழங்கும்வரை அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாதமே அரிசிக்கு பதில் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Next Story