ஆட்டோவில் கஞ்சாவுடன் வந்த 2 பேர் அதிரடி கைது ‘மொபைல்’ சேவை அளித்து வந்தது அம்பலம்


ஆட்டோவில் கஞ்சாவுடன் வந்த 2 பேர் அதிரடி கைது ‘மொபைல்’ சேவை அளித்து வந்தது அம்பலம்
x
தினத்தந்தி 11 Sept 2019 4:00 AM IST (Updated: 10 Sept 2019 9:54 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் கோட்டை பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கொண்டு வந்த 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் ‘மொபைல்’ சேவை போல் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பிராட்வே,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளனர். இதனை தடுக்க சென்னை மாநகர போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் ஒரே இடத்தில் கஞ்சா விற்பனை செய்தால் போலீசில் சிக்கிவிடுவோம் என்று கஞ்சா வியாபாரிகள் தற்போது புதிய முறையில் ஆட்டோவில் வைத்து ‘மொபைல்’ சேவை போல் கஞ்சா தேவைப்படுவோருக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவொற்றியூர் கோட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பக்கமாக சென்ற ஆட்டோ ஒன்று போலீசை பார்த்த உடன் மாற்று பாதையில் சென்றது. உடனடியாக போலீசார் ஆட்டோவை துரத்தி சென்றனர்.

ஆட்டோவை சுற்றி வளைத்த போலீசார் அதை சோதனை செய்ததில், சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த, 30 பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், அதே பகுதியில் திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த பார்த்திபன் ஓட்டி வந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தேடப்படும் குற்றவாளி என்பதும், அந்த ஆட்டோ திருட்டு ஆட்டோ என்பதும் தெரியவந்தது. உடனடியாக பார்த்திபனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஆட்டோ மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 2 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆட்டோவில் வைத்து தேவைப்படுவோருக்கு கஞ்சாவை நேரடியாக சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story