முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம்: முதலீடு வருவதற்கு வாய்ப்பு இல்லை மா.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் - கே.பாலகிருஷ்ணன் பேட்டி


முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம்: முதலீடு வருவதற்கு வாய்ப்பு இல்லை மா.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் - கே.பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 10 Sep 2019 10:30 PM GMT (Updated: 10 Sep 2019 6:46 PM GMT)

முதல்-அமைச்சர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தால் வெளிநாட்டு முதலீடு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேனி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. அவை ஏன் மூடப்பட்டன? என்பது தான் அடிப்படை கேள்வி. மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. பின்னலாடை தொழில் நலிவடைந்து போனதற்கும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை என்பதே முதன்மை காரணம். ஜி.எஸ்.டி. வந்த பின்னர் மக்களின் எல்லா தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலீடு ஈட்டுவதாக கூறி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. போன்ற திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் புதிய தொழிற்சாலைகள் வந்து எப்படி செயல்படும்? தற்போதைய சூழலில் உலகில் எந்த ஒரு நாட்டு முதலாளியும் புதிதாக ஒரு நாட்டில் சென்று அதிக முதலீடு செய்யும் நிலைமை இல்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும், பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது.

இந்தியாவில் இருந்து கடந்த 2 மாத காலத்தில் ரூ.30 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடு திரும்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடு மிக வேகமாக வெளியேறிச் செல்லும் நிலையில், முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போட்டதாக கூறுவது, கிட்டத்தட்ட ஏமாற்றும் விதத்திலான போலியான ஒப்பந்தமாக தான் பார்க்க முடிகிறது.

இந்த பயணம் மூலம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முதலீடு வருவதற்கோ, வேலைவாய்ப்பு பெருகுவதற்கோ வாய்ப்பு இல்லை. அவ்வாறு முதலீடு வந்தால் நிச்சயம் அதை வரவேற்போம்.

தமிழகத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையில் 10 சதவீதத்தையாவது நீர்மேலாண்மையில் காட்டலாம். கடந்த ஓராண்டில் சென்னையில் குடிநீர் வினியோகத்துக்காக ரூ.900 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. இதே பணத்தை நீர்நிலைகளை மேம்படுத்த செலவு செய்து இருக்கலாம்.

ஆனால், தண்ணீர் பற்றாக்குறை வந்தால் தான் தண்ணீர் வியாபாரத்துக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று அரசு நினைக்கிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை என்பது மத்திய அரசின் பிடிவாதத்தால் மட்டுமே தாமதம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story