கறம்பக்குடி அருகே, கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாலை மறியல்


கறம்பக்குடி அருகே, கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Sept 2019 4:15 AM IST (Updated: 11 Sept 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே உள்ள பள்ளத்தான்மனை ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பள்ளத்தான்மனை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே பணி புரிந்து வருகிறார். அவர் விடுப்பு எடுத்து சென்றால் பள்ளிக்கு விடுமுறை விடவேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளிக்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் துப்புரவு பணியாளர்களும் இல்லை.

இதுகுறித்து அப்பகுதி பெற்றோர்கள், இளைஞர் அமைப்பினர் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பள்ளி குழந்தைகளுடன் நேற்று கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி கோட்ட ஆதிதிராவிட நல தாசில்தார் பவானி, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடுதல் ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story