தக்கலை அருகே விபத்து என்ஜினீயரிங் மாணவர் பலி ; திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்


தக்கலை அருகே விபத்து என்ஜினீயரிங் மாணவர் பலி ; திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 11 Sept 2019 4:00 AM IST (Updated: 11 Sept 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த பரிதாபம் நடந்தது.

பத்மநாபபுரம்,

விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

தக்கலை அருகே மணலி சானல்கரை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், நிவின் (வயது 18) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. நிவின், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை நிவின் தன்னுடன் படித்து வரும் நண்பரின் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். குமாரபுரம் அரசு பள்ளியின் அருகே வந்தபோது, எதிரே கொற்றிகோடு எரிச்சமாமூட்டுவிளையை சேர்ந்த ராஜாராம் (57) என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நிவினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ராஜாராமுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனே, கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், ராஜாராமை பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான நிவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய போது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story