குமரியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் 17 கிராமங்களை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துடன் இணைக்க கூடாது - வசந்தகுமார் எம்.பி.


குமரியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் 17 கிராமங்களை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துடன் இணைக்க கூடாது - வசந்தகுமார் எம்.பி.
x
தினத்தந்தி 11 Sept 2019 5:00 AM IST (Updated: 11 Sept 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், 17 கிராமங்களை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துடன் இணைக்க கூடாது என்று வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் நேற்று வசந்தகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

குமரி மாவட்ட வனப்பகுதியை சூழலியல் என்று சொல்லி விரிவுபடுத்துகிறார்கள். 17 வருவாய் கிராமங்களை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துடன் இணைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கிராமங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பின்னர் வீடுகளில் ஆழ் துளைக்கிணறு அமைக்க வேண்டும் என்றால் கூட வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டி இருக்கும்.

எனவே சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தை ஆரம்பத்திலேயே நிறுத்தி கொள்ள வேண்டும். கிராமங்களை இணைக்க கூடாது. இதை தடுக்க மத்திய அரசிடம், மாநில அரசு தொடர்பு கொண்டு பேச வேண்டும். எனினும் நிறுத்தவில்லை என்றால் நாங்களே சென்று அரசிடம் பேசுவோம். அதற்கு பிறகும் நிறைவேற்றப்படவில்லை என்றால் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம்.

தமிழகத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தாததால் குமரி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுவது இல்லை. ஒன்றியங்களுக்கு வரும் பொதுநிதி 2 கோடி ரூபாயை திரும்பவும் சென்னைக்கே அனுப்பி இருக்கிறார்கள்.

மார்த்தாண்டம் மேம்பாலத்துக்கு கீழ் சர்வீஸ் ரோடு அமைக்க சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் தயாராக உள்ளனர். ஆனால் அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கை எடுப்பது இல்லை. சாலைகளை சரிசெய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்.

மீன்வளத்துறை சார்பில் மயிலாடியில் மீன்வளத்துறை கல்லூரி கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதிதாக ஒரு சட்டம் இயற்றி உள்ளது. அந்த சட்டத்தின் மூலம் யாரை வேண்டுமானலும் தீவிரவாதி என்று கூறி கைது செய்ய முடியும். யார் மீது வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்ய அந்த சட்டத்தில் இடம் உள்ளது. இதற்கான முற்றுப்புள்ளி அடுத்த தேர்தலில் தான் வரும்.

பா.ஜனதா அரசு 100 நாள் சாதனைகளை சொல்லி வருகிறது. ஆனால் அது சாதனை அல்ல. நாட்டில் 32.2 சதவீதம் கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ தலைவர் சிவன் சந்திரயானை கொண்டுபோய் நிலவில் நிறுத்தியது தான் சாதனை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story