புகழேந்தி விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் - திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி
‘புகழேந்தி விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று திருச்சியில் டி.டி.வி. தினகரன் கூறினார்.
திருச்சி,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியானது. இதன் மூலம் புகழேந்தி தினகரன் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்றும், அ.ம.மு.க.வில் இருந்து அவர் விலகி விடுவார் என்றும் கூறப்பட்டது. புகழேந்தியின் பேச்சுக்கு அ.ம.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இது பற்றி கருத்து தெரிவித்தபோது, புகழேந்தி வேறு கட்சிக்கு செல்லும் மனநிலையில் இருப்பதாக கூறினார்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி சங்கம் ஓட்டலில் நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.ம.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். அ.ம.மு.க.வில் இருந்து சிலர் விலகி செல்கிறார்கள். அதற்காக என்ன செய்ய முடியும். அவர்கள் சொந்த விருப்பத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் செல்கிறார்கள். அதை நான் துரோகம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. உங்களுடன் சேர்ந்து நானும் நடப்பது எல்லாவற்றையும் ஊடகங்களில் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பேன். ஏற்கனவே எடுத்த சில நடவடிக்கைகள் எல்லாம் தீர விசாரித்து தான் எடுக்கப்பட்டது. அதேபோல் இனியும், யார் மீது தவறு இருக்கிறது என்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். அப்போது தலைமை நிலைய செயலாளர் மனோகரன், மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story