விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் கலெக்டர் சி.கதிரவன் தகவல்


விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 10 Sep 2019 11:30 PM GMT (Updated: 10 Sep 2019 7:58 PM GMT)

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

விவசாயத்தில் வேலை ஆட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தில் பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர லாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை எந்திர மயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி விவசாயிகளுக்கு டிராக்டர், பவர்டில்லர், சுழற்கலப்பை, கொத்துக்கலப்பை, கரும்புகட்டை சீவும் கருவி, கரும்பு சோகை துகளாக்கும் கருவி, தென்னை ஓலை துகளாக்கும் கருவி முதலானவற்றுக்கு அவற்றின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இதர விவசாயிகளுக்கு அவற்றின் மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, இவற்றில் எதுகுறைவோ அந்த தொகை மானியமாகவும் வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு, அதிக விலை உள்ள வேளாண் எந்திரங்கள் குறைந்த வாடகைக்கு கிடைக்கும் வகையில், முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

மொத்த மானியத்தொகையில் பொதுப்பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிட பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் பிடித்தம் செய்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக்கணக்கில் ஒப்பந்தகாலமான 4 ஆண்டுகள் இருப்பில் வைக்கப்படும். மீதித்தொகை பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

4 ஆண்டுகளுக்குப்பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத்தொகை திரும்ப வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை ஈரோடு உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story