பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக செயல்படுத்த வேண்டும்- விவசாயிகள் சங்கத்தினர் மனு


பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக செயல்படுத்த வேண்டும்- விவசாயிகள் சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 10 Sep 2019 11:00 PM GMT (Updated: 10 Sep 2019 7:58 PM GMT)

பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை இருகூரில் இருந்து பெங்களூரு தேவனகுந்தி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் விவசாயிகள் விளை நிலங்களின் வழியாக பெட்ரோலிய எண்ணெய் குழாயை பதிக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராயக்கோட்டை உடையாண்டள்ளியில் தொடங்கி, காமன்தொட்டி, முத்தாலி, நந்திமங்கலம், படேதப்பள்ளி, கும்மனபள்ளி, ஒட்டப்பள்ளி வழியாக பாகலூரை அடுத்த கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலிகானப்பள்ளி வரை, 28 ஊராட்சிகளில் உள்ள 1,356 சர்வே எண்களில், 48 கிலோ மீட்டர் தூரம் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக குழாய் பதிக்கப்படும் வழி எங்கும், 70 அடி அகலம் வரை எண்ணெய் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். திட்டப்பாதையில் மரங்கள் வளர்க்க முடியாது. சாலைகள், கோழிப்பண்ணைகள், ஆழ் துளைக்கிணறுகள் உட்பட எந்த கட்டுமானப் பணிகளையும் செய்யக்கூடாது. கனரக எந்திரங்களை பயன்படுத்தி எந்த வேலையும் செய்யக்கூடாது. எப்போது வேண்டுமானாலும், நிலத்தில் பயிர்கள் செய்திருந்தாலும், அவைகளை திட்டப் பணிகளை மேற்கொள்ளவும், குழாய்களை சோதனை செய்திடவும், எண்ணெய் நிறுவனத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாய பாசனத்திற்காகக்கூட குழாய்களை எண்ணெய் நிறுவனத்தின் முன் அனுமதியின்றி போடக்கூடாது. எண்ணெய் குழாய்க்கு சேதம் ஏற்பட்டாலோ, கசிவு ஏற்பட்டு விபத்து நடந்தாலோ கூட நிலத்திற்கு சொந்தக்காரர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே விவசாயிகளை கடும் பாதிப்புக்குள்ளாகும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. மேலும் நில அடமானம் மூலம் கடன் வழங்கும் வங்கிகள் எண்ணெய் குழாய் போடப்பட்ட பின் நிலத்தின் மேல் கடன் கொடுப்பதில்லை. பண மதிப்பு மிக்க தேக்கு, தென்னை, பனை, சவுக்கு, மா போன்றவற்றை விவசாயம் செய்ய முடியாமல் விவசாய குடும்பங்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும்.

அந்த நிலங்களில் நவீன வேளாண்மைக்கு ஏற்றவாறு எந்திரங்களைக் கொண்டும் எவ்வித வளர்ச்சிப் பணிகளும், விவசாயமும் செய்ய முடியாது. இத்திட்டத்தினால் ஏற்படும் இழப்பினால் விவசாய குடும்பங்களின் குழந்தைகளுடைய கல்வி, மருத்துவம், திருமணம், அவசர செலவுகள் போன்றவற்றை எதிர்கொள்ள இயலாது. குடும்பங்கள் பாதிக்கும். விவசாயமும், விவசாயிகளும், முற்றிலும் அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்படும். எனவே இத்திட்டத்தை விளை நிலங்களைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று மனு அளித்தனர்.

Next Story