மாவட்ட செய்திகள்

திருச்செங்கோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Cooli workers protest in Tiruchengode

திருச்செங்கோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு,

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. சுமைதூக்கும் தொழிலாளர் சம்மேளன மாநாடு முடிவுக்கு இணங்க 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். பொருட்கள் பரிவர்த்தனையில் ஈடுபடும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி.யில் ஒரு சதவீதம் கொடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் நிதி ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைப்படி தொழிலாளர்கள் சுமக்கும் எடை அளவு 55 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பணியிடத்தில் நிகழும் விபத்துக்களில் உயிரிழக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசாங்க இன்சூரன்ஸ் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் வழங்குவதோடு திருமண உதவித்தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க கிளை தலைவர்கள் மாதேஸ்வரன், குழந்தைவேல், அய்யாவு, கோவிந்தராஜ், துரைசாமி, ரவி, செல்வராஜ் மற்றும் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.