கழிவுகளை முறையாக அகற்றாததால் கட்டிட உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - கலெக்டர் உத்தரவு
சேலத்தில் கட்டிட கழிவுகளை முறையாக அகற்றாததால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.
சேலம்,
சேலம் அழகாபுரத்தில் உள்ள எம்.டி.எஸ். நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடியிருப்புகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதனை ஆய்வு செய்தார்.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் தேவையற்ற பொருட்களை சேகரித்து மாநகராட்சி சுகாதார பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், காலி இடங்களின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலமாகவே தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 19-ல் உள்ள முல்லை நகர் பகுதிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது சின்னப்ப செட்டி காலனியில் புதிதாக கட்டுமான பணிகள் மேற்கொண்டு வரும் தனியார் குடியிருப்பில் கட்டிட கழிவுகள் முறையாக அகற்றாமலும், தூய்மையாக பராமரிக்காமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.
மேலும் கலெக்டர் ராமன் கூறுகையில், பொதுமக்கள் தங்களின் தேவைக்கு அதிகமாக குடிநீரை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்காமல், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீரை மாற்றி வைத்து, குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், டிரம்கள் மற்றும் தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்திட வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் பாஸ்கரன், சுந்தரராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story