சேலம் புதிய பஸ்நிலையம் அருகே ஓட்டல், கடைகளில் மேற்கூரையை துளையிட்டு திருட்டு
சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டல், 2 கடைகளில் மேற்கூரையை துளையிட்டு பணம், செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகரில் ஏராளமான செல்போன் உதிரிபாகங்கள் கடை மற்றும் சில்லரை வியாபார கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இங்கிருக்கும் ஒரு செல்போன் கடையின் மேற்கூரையை துளையிட்டு மர்ம ஆசாமிகள் உள்ளே இறங்கினர். அங்கு பணம் இல்லாததால் சில செல்போன்களை திருடினர்.
இதையடுத்து செல்போன் கடை அடுத்துள்ள செருப்பு கடையின் மேற்கூரையை துளையிட்டு அதற்குள் மர்ம ஆசாமிகள் இறங்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கடையை அடுத்துள்ள ஓட்டலின் மேற்கூரையை துளையிட்டு மர்ம ஆசாமிகள் உள்ளே இறங்கி பணத்தை திருடினர். இதையடுத்து மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
நேற்று காலை வழக்கம் போல் கடைகள் மற்றும் ஓட்டலை திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் வந்தனர். அப்போது தான், மர்ம ஆசாமிகள் கடைகள், ஓட்டலின் மேற்கூரையை துளையிட்டு உள்ளே இறங்கி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த சம்பவங்களில் எவ்வளவு பணம் மற்றும் செல்போன்கள் திருட்டு போனது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story