சேலத்தில் கடந்த 8 மாதங்களில் 48 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ; ரூ.30½ லட்சம் அபராதம் வசூல்


சேலத்தில் கடந்த 8 மாதங்களில் 48 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ; ரூ.30½ லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 10 Sep 2019 11:00 PM GMT (Updated: 10 Sep 2019 7:59 PM GMT)

சேலத்தில் கடந்த 8 மாதங்களில் 48 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.30½ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாநகராட்சி பகுதிகளில் அரசின் உத்தரவுப்படி கடந்த 1.1.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்காணிப்பு குழுவினரால் கடந்த 2.1.2019 முதல் 31.8.2019 வரையிலான கடந்த 8 மாதங்களில், 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் உள்ள இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகளில் திடீர் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

சூரமங்கலம் மண்டலத்தில் 38 ஆயிரத்து 787 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 1,969 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 4 ஆயிரத்து 629 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 2 ஆயிரத்து 615 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் என மொத்தம் 48 ஆயிரம் கிலோ (48 டன்) பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 170 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார். மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை, விற்பனை செய்வதை தடுக்க, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Next Story