கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் - கரைபுரண்டு ஓடும் தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சி


கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் - கரைபுரண்டு ஓடும் தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 Sept 2019 4:45 AM IST (Updated: 11 Sept 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வறண்டு கிடந்த ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில், 

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பருவமழையால் அங்குள்ள அணைகளிலிருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நிலவரப்படி மேலணை என்று சொல்லப்படும் முக்கொம்புக்கு வினாடிக்கு 52 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதில் காவிரியில் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியும், மீதமுள்ள 20 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவில் தஞ்சாவூர், கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையை வந்தடைந்தது. இதில் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணை முழு கொள்ளளவை எட்டியதால், அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் உபரிநீராக கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 4 ஆயிரம் கன அடியில் 2,120 கன அடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கும், 1,880 கன அடி நீர் கடலூர் மாவட்டத்திற்கு வரும் சி.என்.ஆர்., கஞ்சங்கொல்லை ஆகிய வாய்க்கால்கள் வழியாகவும், தஞ்சாவூர் மாவட்டம் கும்கி மணியாறு, மேலராமன் ஆகிய வாய்க்கால்களிலும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.

கொள்ளிடத்தில் உபரி நீராக வெளியேற்றப்படும் தண்ணீர் சிதம்பரம் வல்லம்படுகை வழியாக சென்று கொடியம்பாளையத்தில் கடலில் கலந்து வருகிறது.

வறட்சியின் கோர பிடிக்குள் சிக்கியிருந்த கொள்ளிடம் ஆற்றில் எங்கும் மணல் மேடுகளும், காய்ந்த புற்களுமாக காட்சி தந்து கொண்டிருந்தது. இதனால் கரையோர விவசாயிகள் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த சூழ்நிலையில் கீழணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இரண்டு கரைகளையும் முத்தமிட்டபடி நுங்கும் நுரையுமாக பொங்கி செல்லும் தண்ணீரை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் வரும் தண்ணீரை வீணாக கடலில் கலக்க விடாமல் ஏரி, குளங்கள் அனைத்தையும் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் 14 ஆயிரம் கனஅடி நீர் கீழணைக்கு வந்தடைந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும். எனவே நீர் வரத்துக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்படும் அளவு மாற்றி அமைக்கப்படும்.

அதே நேரத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை நிரப்புவதற்கு கீழணையில் உள்ள கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

Next Story