வாகனங்கள் நிறுத்த போலீஸ் கெடுபிடி: மக்கள் நடமாட்டம் குறைந்து கடற்கரை வெறிச்சோடியது


வாகனங்கள் நிறுத்த போலீஸ் கெடுபிடி: மக்கள் நடமாட்டம் குறைந்து கடற்கரை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 11 Sept 2019 4:35 AM IST (Updated: 11 Sept 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் போலீசாரின் கெடுபிடியால் கடற்கரையில் மக்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடியது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள கடற்கரையின் எழில்மிகு தோற்றம் அனைவரையும் வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை சாலையின் வடக்கே பழைய சாராய வடி சாலை முதல் தெற்கே டூப்ளே சிலை வரை கடற்கரை சாலையின் இருபுறமும் அலங்கார மின்விளக்குகள், கார்கில் நினைவுச்சின்னம், பழைய கலங்கரை விளக்கம், காந்தி சிலை, போர் நினைவுச்சின்னம், பழைய சுங்கச்சாவடி, அம்பேத்கர் மணிமண்டபம் போன்றவை பார்வையிட வேண்டிய இடங்களாகும்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதன்பிறகு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே மாலை வேளைகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வரும் உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரையில் பொழுதை மகிழ்ச்சியாக களித்து வந்தனர்.

இந்த நிலையில் புதுவை போக்குவரத்து போலீசார் தடாலடியாக எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி கடற்கரையையொட்டி உள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருடன் ‘நாங்கள் வாகனத்தை எங்கே நிறுத்த வேண்டும்’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்கள் வாகனத்தை நிறுத்த இடமின்றி கடற்கரைக்கு செல்லாமல் வீட்டிற்கு திரும்பினார்கள். வாகனங்கள் நிறுத்த போலீசார் கெடுபிடி செய்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்து கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரை சாலையில் போக்குவரத்து போலீசார் கெடுபிடிக்கான காரணம் என்ன என்பது குறித்து கேட்டபோது, ‘இது போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவு. இதற்கு மேல் வேறு எதுவும் கூற முடியாது’ என்றனர்.

கடற்கரைக்கு அமைதியாக பொழுதை களிக்க வரும் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதாக கூறி வாகனங்களை நிறுத்த விடாமல் தடுக்கும் போலீசாரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story