மாவட்ட செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி + "||" + Election promises We are ready to fulfill Minister Namachivayam confirmed

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுவை,

புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.15.63 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


புதுவை மாநிலத்தை பொறுத்தவரை நமக்கு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு, கவர்னரால் பிரச்சினைகள் உள்ளது. இருந்தபோதிலும் அவற்றை சமாளித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இது எங்களுக்கு கல்லில் நார் உரிப்பதுபோன்று உள்ளது.

நாம் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உதவி செய்வதில்லை. குறிப்பாக 7-வது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி நாம் அமல்படுத்தினோம். ஆனால் அதற்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்காக நமக்கு ரூ.1,400 கோடி வரவேண்டி உள்ளது.

நமது உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துள்ளது. தற்போது புதுவை மக்கள் இலவச அரிசி வழங்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை பணமாகத்தான் கொடுக்கவேண்டும் என்று கவர்னர் கூறுகிறார். நாங்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடத்தியபோது இலவச அரிசி வழங்க சம்மதித்தார். ஆனால் இப்போது இலவச அரிசி வழங்க மறுப்பு தெரிவிக்கிறார்.

கடந்த காலங்களில் கட்டி முடிக்கப்படாமல் காமராஜர் மணிமண்டபம், உப்பனாறு மேம்பாலம் போன்றவை பாதியில் நிற்கிறது. காமராஜர் மணிமண்டபத்தை இன்னும் 3 மாதத்தில் கட்டி முடிப்போம். உப்பனாறு மேம்பாலத்தையும் கட்டி முடிக்க உள்ளோம்.

இதேபோல் 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு மின் இணைப்பு, மோட்டார் உள்ளிட்டவை வாங்கிட ரூ.7 கோடி வரை தேவைப்படுகிறது. இதற்கான நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்ற தயாராக உள்ளோம். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமின் வளர்ச்சிக்காகவும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசிடம் நிதி வாங்கி வருகிறார். அதில் ஒரு பங்கினை ஏனாமில் செலவிட்டால் மீதமுள்ள 29 தொகுதிகளுக்கும் செலவிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

விழாவில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., அரசு செயலாளர் சரண், தலைமை பொறியாளர் மகாலிங்கம், மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, செயற்பொறியாளர் ஞானசேகரன், மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, உதவி பொறியாளர் சுந்தர்ராஜு, இளநிலை பொறியாளர்கள் ராஜன், பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.