விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?


விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
x
தினத்தந்தி 10 Sep 2019 10:15 PM GMT (Updated: 10 Sep 2019 11:51 PM GMT)

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு வர நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர், 

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டது. பல்வேறு தடைகளை தாண்டி ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் ரெயில்வே மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகள் ஆகியவை கடந்த ஓராண்டிற்கும் மேல் அமைக்கப்படாமலே இருந்தது. இதனால் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

தற்போது மேம்பாலத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு வராமல் தொடர்ந்து மேம்பாலம் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்விளக்குகள் அமைக்கப்பட்ட பின்பு அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வாகன விபத்து ஏற்பட்ட பின்பு மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காமல் முன்னரே இதில் அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். மேலும் மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட வேண்டும்.

Next Story