தலைமை நீதிபதி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


தலைமை நீதிபதி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2019 4:00 AM IST (Updated: 11 Sept 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி, மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மதுரை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கொலிஜியம் மறுத்துள்ளது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி கடிதம் அனுப்பினார். இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை வேறு மாநிலத்துக்கு இடமாற்றும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக மதுரை ஐகோர்ட்டில் எம்.எம்.பி.ஏ.-எம்.பி.எச்.ஏ.ஏ. இணைப்பு சங்கங்களை சேர்ந்த வக்கீல்கள் நேற்று காலை 10 மணி அளவில் கோர்ட்டு வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கங்களின் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். எம்.எம்.பி.ஏ. சங்க செயலாளர் இளங்கோ, மகேந்திரபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் கலந்துகொண்டனர். முடிவில் இணைப்பு சங்கத்தின் செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

இதையடுத்து வக்கீல்கள் நேற்று தங்களது வழக்கு விசாரணையில் ஆஜராகாமல், கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதேபோல் மதுரை மாவட்ட கோர்ட்டிலும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை வக்கீல்கள் சங்கம், மதுரை மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த வக்கீல்கள் சுமார் 4 ஆயிரம் பேர் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மதுரை சட்டக்கல்லூரி முன்பு மாணவ-மாணவிகளும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story