அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் - மாநகராட்சி கமிஷனர் விசாகன் பேச்சு


அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் - மாநகராட்சி கமிஷனர் விசாகன் பேச்சு
x
தினத்தந்தி 10 Sep 2019 10:45 PM GMT (Updated: 10 Sep 2019 11:58 PM GMT)

அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு முறையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறினார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள், தனியார் கட்டிட கட்டுமானத்தினர், வணிகர்கள், பள்ளி, கல்லூரி, திருமண மண்டபம், வணிக வளாகம் மற்றும் மருத்துவமனை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மிக முக்கியமானதாகும். முந்தைய காலங்களில் ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீரை சேமித்து வைப்பதற்கு அன்றைய காலங்களில் முன்னோர்கள் மிக அருமையான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். மழை பெய்யும் காலங்களில் ஒரு கண்மாய் நிறைந்தால் உடனடியாக அடுத்தடுத்து உள்ள கண்மாய்கள் நிரம்பும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைத்து தண்ணீரை முறையாக சேமிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. அப்போதைய கால முறைகள் தற்போது கையாளபடுவதில்லை. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 34 ஊருணிகள் தூர்வாரப்பட உள்ளன. அதில் முதல்கட்டமாக ஆனையூர் கோசாகுளம் ஊருணி தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பதற்கு தயாராக உள்ளது. மேலும் 8 ஊருணிகள் தனியார் பங்களிப்புடன் மழைநீர் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள ஊருணிகள் பெரிய நிறுவனங்கள் மூலம் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வைகை ஆற்றில் சேரும் பந்தல்குடி வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக ரூ.2½ கோடி மதிப்பீட்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் நிதி பெறப்பட்டுள்ளது. இன்னும் 8 மாதங்களில் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலுமாக தடுக்கப்படும். ஒவ்வொருவரின் வீட்டில் பெய்யும் மழைநீரை அவரவர் வீட்டின் ஆழ்துளை கிணறுகள் பக்கத்தில் சேமித்து வைத்தாலே நிலத்தடி நீர்மட்டம் தானாகவே உயரும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் மழையின்போது மழைநீர் தேங்கும் பகுதிகளில் மழைநீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக பொறியாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களும் மழைநீரை எந்த இடத்தில் சேமித்து வைக்கலாம் என்ற விவரத்தினை மாநகராட்சி அழைப்பு மைய எண் 0452-2525252 மற்றும் வாட்ஸ்-அப் எண் 7449104104 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

ஓராண்டில் 40 நாட்களில் பெய்யும் மழைநீரை தேக்கி வைத்து அந்த வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு வளாகங்கள் மிக சிறப்பாக இந்த மழைநீர் சேகரிப்பு முறையினை செய்து வருகிறார்கள். மதுரை மாநகராட்சியில் உள்ள 6 பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இப்போது இருந்தே நாம் ஒவ்வொருவரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி மழைநீரை சேமித்து வைக்க வேண்டும். அப்போது தான் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும். எனவே இன்னும் 2 மாதங்களில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு முறையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story