டி.கே.சிவக்குமார் கைதுக்கு கண்டனம் ஒக்கலிகர் சமுதாயத்தினர் சார்பில் பெங்களூருவில் பிரமாண்ட பேரணி
முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் நேற்று ஒக்கலிகர் சமுதாயத்தினர் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள்.
பெங்களூரு,
முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் நேற்று ஒக்கலிகர் சமுதாயத்தினர் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். பழிவாங்கும் அரசியலில் மத்திய பா.ஜனதா அரசு ஈடுபடுகிறது என்று தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
பழிவாங்கும் அரசியல்
அவரை நாளை (வெள்ளிக்கிழமை) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மத்திய பா.ஜனதா அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாகவும் ஒக்கலிகர் சமுதாயத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
மேலும் டி.கே.சிவக்குமார் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசு, அமலாக்கத்துறையினருக்கு எதிராகவும், அந்த சமுதாயம் சார்பில் வருகிற 11-ந் தேதி (அதாவது நேற்று) பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் இருந்து கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் ஒக்கலிகர் சமுதாயத்தினர் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டனர்.
ஒக்கலிகர் சமுதாயத்தினர் பேரணி
அந்த சமுதாயத்தை சேர்ந்த மடங்களின் மடாதிபதிகள், முக்கிய தலைவர்கள், கன்னட அமைப்பினர் மைதானத்திற்கு வந்தனர். இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மந்திரிகள் ராமலிங்கரெட்டி, கிருஷ்ணபைரே கவுடா, செலுவராயசாமி, முன்னாள் எம்.பி. சிவராமேகவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக ராமநகர், ஹாசன், மண்டியா, துமகூரு, பெங்களூரு புறநகர் உள்பட 12 மாவட்டங்களை சேர்ந்த ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
பெங்களூரு ராஜாஜிநகரில் இருந்து டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் 110 வேன்களில் நேஷனல் கல்லூரி மைதானத்திற்கு திரண்டு வந்திருந்தனர். பின்னர் நேஷனல் கல்லூரி மைதானத்தில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டு வந்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாகவும், மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறையினருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் நேற்று மதியம் 2 மணியளவில் அந்த பேரணி சுதந்திர பூங்காவை வந்தடைந்தது.
ஆதரவாக இருக்கிறோம்
அங்கு நடந்த கூட்டத்தில் மடாதிபதி நஞ்சாவதூத சுவாமி பேசுகையில், டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருப்பது சட்டத்திற்கு எதிரானது. குஜராத்தில் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் அகமது பட்டேல் வெற்றிக்காக டி.கே.சிவக்குமார் செயல்பட்டதால், அதற்கு பழிவாங்கும் விதமாக அமலாக்கத்துறையினர் மூலம் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். டி.கே.சிவக்குமார் தவறு செய்திருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். உள்நோக்கத்துடன் அவரை கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எந்த தவறும் செய்யவில்லையா?.
டி.கே.சிவக்குமாருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை கண்டு ஒக்கலிகர் சமுதாயத்தால் பொறுத்து கொண்டு இருக்க முடியாது. ஏற்கனவே தொழில்அதிபர் சித்தார்த்துக்கு வருமான வரி நெருக்கடி கொடுத்ததால் தான் அவர் தற்கொலை செய்திருந்தார். அதுபோன்ற நிலைமை டி.கே.சிவக்குமாருக்கும் வரக்கூடாது. டி.கே.சிவக்குமாரை உடனடியாக விடுவிக்கும்படி ஒக்கலிகர் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபடவில்லை. சித்தார்த், டி.கே.சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது, என்றார்.
கவர்னரிடம் மனு
இதுபோல, பேரணியில் கலந்துகொண்ட ஒக்கலிகர் சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியலில் பழிவாங்கும் நோக்கத்துடன் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருப்பதாகவும், இதற்காக மத்திய பா.ஜனதா அரசே முழு காரணம் என்றும் குற்றச்சாட்டு கூறி பேசினார்கள். சுதந்திர பூங்காவில் இருந்து கவர்னர் மாளிகைக்கு செல்ல ஒக்கலிகர் சமுதாயத்தினருக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து, அந்த சமுதாயத்தை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிவராமே கவுடா தலைமையில் கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டித்தும், அமலாக்கத்துறையினருக்கு எதிராகவும் மனு வழங்கினார்கள்.
வாகன ஓட்டிகள் அவதி
ஒக்கலிகர் சமுதாயத்தினர் நடத்திய பேரணியை ஒட்டி நேஷனல் கல்லூரி மைதானம், சுதந்திர பூங்காவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் பசவனகுடியில் இருந்து சுதந்திர பூங்கா வரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் பசவனகுடி, சிட்டி மார்க்கெட், டவுன்ஹால், மெஜஸ்டிக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் அந்த சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
Related Tags :
Next Story