வேதாரண்யத்தில் பயங்கரம், கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை - 2 பேர் கைது


வேதாரண்யத்தில் பயங்கரம், கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை - 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Sept 2019 4:15 AM IST (Updated: 11 Sept 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேதாரண்யம், 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமு மகன் ரவி (வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில் (40). கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரும் உறவினர்கள். ரவி-செந்தில் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் ரவி தனது குடும்பத்துடன் கோடியக்காடு பகுதிக்கு சென்று வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் செந்தில், அவரது தாய் செல்வி, உறவினர் சாந்தா ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கோடியக்காட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடியுடன் சென்றனர்.

கோடியக்காட்டுக்கு சென்ற அவர்கள் வீட்டில் இருந்த ரவி, அவரது மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களால் தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த ரவி, செந்தில் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபிஉல்லா சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த செந்திலின் தாய் செல்வி, உறவினர் சாந்தா, ரவி மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து ரவி மற்றும் தமிழ்செல்வன் (30) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக மோட்டார் சைக்கிள், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Next Story