புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைக்க முயன்ற தந்தை-மகன் சிக்கினர்; போலீசார் தீவிர விசாரணை


புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைக்க முயன்ற தந்தை-மகன் சிக்கினர்; போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 11 Sep 2019 10:45 PM GMT (Updated: 11 Sep 2019 5:29 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைக்க முயன்ற தந்தை-மகன் சிக்கினார்கள். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஆனைக்கட்டி கிராமத்தில் பழமையான சடையப்புச்சி கோவில் உள்ளது. அந்தப்பகுதி கிராம மக்கள் கோவிலுக்கு வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள். கோவிலுக்குள் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஒரு உண்டியலும் உள்ளது. இந்தநிலையில் ஆனைக்கட்டியை சேர்ந்த ஆண்கள் சிலர் மில்லில் இரவு பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சடையப்புச்சி கோவில் வழியாக வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது கோவில் உண்டியலை யாரோ 2 பேர் ரம்பத்தால் அறுத்து உடைத்துக்கொண்டு இருந்தது தெரிந்தது. உடனே அனைவரும் சேர்ந்து அந்த 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தார்கள். பிறகு அவர் களை புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூரை சேர்ந்த ராஜன் (50). இவருடைய மகன் முருகேசன் (28). என்பதும், இவர்கள் சடையப்புச்சி கோவில் உண்டியை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது.

பிடிபட்ட தந்தை-மகன் ஏற்கனவே வேறு எங்காவது கோவில்களில் உண்டியல்களை உடைத்து கொள்ளை அடித்துள்ளார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story