பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை டி.கே.சிவக்குமார் கைதை அரசியலாக்குவது சரியல்ல மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதற்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதற்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
அரசியல் உள்நோக்கம்
முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அரசியல் உள்நோக்கத்துடனும், பழிவாங்கும் நோக்கத்துடனும் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருப்பதாக மத்திய பா.ஜனதா அரசு மீது காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பெலகாவியில் நேற்று மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பாரபட்சமாக நடந்து கொள்ள...
சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் பணபரிமாற்றம் செய்தது, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
டி.கே.சிவக்குமார் தவறு செய்யவில்லை என்றால், அதனை கோர்ட்டில் தான் நிரூபிக்க வேண்டும். அவர் தவறு செய்யவில்லை என்றால், அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. விசாரணையை அவர் தைரியமாக எதிர்கொள்ளலாம். டி.கே.சிவக்குமார் என்பதால், அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் பாரபட்சமாக நடந்து கொள்ள முடியுமா?. டி.கே.சிவக்குமாருக்காக சட்டத்தில் திருத்தம் செய்ய முடியுமா?.
அரசியலாக்குவது சரியல்ல
இதனை டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக பா.ஜனதா மீது குற்றச்சாட்டு சொல்லுவது சரியல்ல. டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதற்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. டி.கே.சிவக்குமார் கைது விவகாரத்தை அரசியலாக்குவது சரியல்ல.
இதற்காக போராட்டங்கள் நடத்துவது, ஒக்கலிக சமுதாயத்தினரை தூண்டி விடுவது சரியல்ல. டி.கே.சிவக்குமாருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதனை அனைவரும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
இவ்வாறு மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
Related Tags :
Next Story