சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறப்பு ஆந்திர அதிகாரி தகவல்


சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறப்பு ஆந்திர அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 6:02 PM GMT)

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட, சோமசீலா அணையிலிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊத்துக்கோட்டை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட, சோமசீலா அணையிலிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர அதிகாரி தெரிவித்துள்ளார்.

பூண்டி ஏரி வறண்டது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி தண்ணீர் இன்றி முழுவதுமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி, ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட உள்ள தண்ணீரை எதிர்ப்பார்த்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி, ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். அதன்படி ஜனவரி முதல் மார்ச் வரை 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

தண்ணீர் நிறுத்தம்

கண்டலேறு அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததால் கடந்த மார்ச் 26-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு அடியோடு நிறுத்தப்பட்டது. கோடை வெயில் மற்றும் கிருஷ்ணா நதிநீர் வரத்து இல்லாததால் பூண்டி ஏரி வறண்டு காணப்படுகிறது. கிருஷ்ணாநதி கால்வாயும் வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்ட மேலாண்மை கண்காணிப்பு பொறியாளர் வெங்கடேஸ்வரராவ் நேற்று முன்தினம் மாலை திருப்பதியில் நிருபர்களிடம் பேசும்போது, தற்போது ஸ்ரீசைலம் அணையிலிருந்து சோமசீலா நீர்த்தேக்கத்துக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சோமசீலா அணையில் தற்போது 31 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு நேற்று மாலை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்படுகிறது.

பூண்டிக்கு திறந்து விடப்படும்

சோமசீலா நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீீர் கண்டலேறு நீர் தேக்கத்துக்கு வந்து சேர இன்னும் 2 நாட்களாகும். கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆனால் தற்போது 5 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே தண்ணீீர் இருப்பு உள்ளது. கண்டலேறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு 8 முதல் 10 டி.எம்.சி. ஆக அதிகரிக்கும் போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

சோமசீலா நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் தண்ணீீர் மூலம் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் நீர்இருப்பு 8 முதல் 10 டி.எம்.சி.யாக அதிகரிக்க இன்னும் 16 நாட்கள் ஆகும். எனவே 15 அல்லது 20 நாட்களில் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இவ்வாறு வெங்கடேஸ்வரராவ் தெரிவித்தார்.

கோரிக்கை ஏற்பு

அதன்படி பார்த்தால் கண்டலேறு அணையிருந்து தமிழக எல்லைக்கு வந்தடைய 20 நாட்களாகும். கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீீர் திறந்து விடப்பட்டால், தற்போது சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை ஓரளவுக்கு தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் நேரில் சந்தித்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 8 டி.எம்.சி. தண்ணீர்திறந்துவிட கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று தற்போது சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story