குற்றச்செயல்களை கண்காணிக்கும் விதமாக மாமல்லபுரத்தில் சுழலும் கேமராக்கள் அமைக்கும் பணி தொடக்கம்


குற்றச்செயல்களை கண்காணிக்கும் விதமாக மாமல்லபுரத்தில் சுழலும் கேமராக்கள் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 12 Sept 2019 4:00 AM IST (Updated: 11 Sept 2019 11:41 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 15 இடங்களில் சுழலும் கேமராக்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம், 

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் போர்வையில் திரிந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 15 இடங்களில் சுழலும் கேமராக்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

குற்றச்சம்பவங்கள்

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் தலைசிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு ஆகியவை யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய பாரம்பரிய நினைவு சின்னங்களாக உள்ளன.

தற்போது தென் இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரையில் கோவிலுடன் கூடிய அழகிய கடற்கரைக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் அதிகம் வந்து செல்லும் முதல் இடமாக உள்ளது. குறிப்பாக பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத், புத்தாண்டு மற்றும் கோடை விடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மாமல்லபுரம் கடற்கரையில் லட்சக்கணக்கில் பயணிகள் கூடுவார்கள்.

கேமரா அமைக்கும் பணிகள்

தற்போது மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் போர்வையில் திரியும் சில சமூக விரோதிகள் கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் உடைமைகளை திருடுவதும், காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசுக்கு அடிக்கடி புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இதையடுத்து, போலீசாரின் பரிந்துரையின்பேரில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் வகையில் முதல் கட்டமாக 15 இடங்களில் சுழலும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக சிமெண்ட பலகை அமைத்து சிறிய தூணில் கேமரா பொருத்துவதற்கான பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கண்காணிப்பதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Next Story