பெரியபாளையம் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்த 9 பேர் மீட்பு


பெரியபாளையம் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்த 9 பேர் மீட்பு
x
தினத்தந்தி 11 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 6:15 PM GMT)

பெரியபாளையம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 4 பெண்கள் உள்பட 9 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.

பெரியபாளையம், 

பெரியபாளையம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 4 பெண்கள் உள்பட 9 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.

அதிரடி ஆய்வு

பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் கிராமத்தில் இயங்கிவரும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளை வைத்து வேலை வாங்குவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், கலெக்டர் உத்தரவின் பேரில், உதவி கலெக்டர் ரத்னா தலைமையில், ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் திருக்கண்டலம் பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையிலும், கல்மேடு பகுதியில் முனிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக இயங்கி வரும் செங்கல் சூளையிலும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

கொத்தடிமைகள் மீட்பு

இந்த இரண்டு சூளைகளிலும் 4 பெண்கள் உள்பட 9 கொத்தடிமைகள் பணியாற்றி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்கள் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு பணி அமர்த்தப்பட்டது தெரியவந்தது. இவர்கள் 9 பேரையும் மீட்ட வருவாய்த்துறையினர் அவர்களுக்கு கொத்தடிமை மீட்பு சான்றிதழ்களை வழங்கி, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வகுமார், பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் செங்கல் சூளையின் உரிமையாளர்களான சரவணன், முனிகிருஷ்ணன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story