கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், காய்கறி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், காய்கறி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 12 Sept 2019 4:00 AM IST (Updated: 12 Sept 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கம்பம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு உட்பட்ட நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, மணிக்கட்டி ஆலமரம் ஆகிய பகுதிகளில் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் பீட்ரூட், முள்ளங்கி, கொத்தமல்லி, புடலை, பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த காய்கறி பயிர்களுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதற்காக ஆழ்துளை கிணறு, கிணற்றுப்பாசனத்தின் மூலம் வாய்க்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அரசு மானியத்துடன் சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் காய்கறி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதுடன், மண் ஈரப்பதத்துடன் நீண்ட நேரம் இருக்கிறது. இதனால் குறைந்த அளவே தண்ணீர் செலவாகி அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, தெளிப்பு நீர் பாசனம் என்பது மழை பெய்வது போல் தண்ணீர் பரவலாக நிலத்தில் விழுவது ஆகும். இதன் மூலம் தண்ணீர் செலவு குறைவாக உள்ளது. காய்கறி பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் தெளிப்பு நீர் பாசனத்தில் அதிக ஆர்வம் செலுத்துகிறோம். தற்போது பீட்ரூட் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Next Story