நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே மத்திய அரசின் 100 நாள் சாதனை - சீமான் பேட்டி


நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே மத்திய அரசின் 100 நாள் சாதனை - சீமான் பேட்டி
x
தினத்தந்தி 12 Sept 2019 4:30 AM IST (Updated: 12 Sept 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே மத்திய அரசின் 100 நாள் சாதனை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நத்தம்,

நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நத்தத்துக்கு வருகை தந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2016 தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. வருகிற 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம். எங்களது ஓட்டு வங்கி உயர்ந்து கொண்டே வருகிறது. கோவை சிறையில் நானும், கொளத்தூர் மணியும் ஒன்றாக இருந்தோம். அந்த அறையில் தான் தமிழ் தேசிய தலைவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யும் இருந்தார். அவர் இருந்த அறையில் நாங்களும் சிறை தண்டனை அனுபவித்தோம். அது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், வீரமாகவும் உள்ளது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே மத்திய அரசின் 100 நாள் சாதனை ஆகும். தமிழகத்தில் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். சுகமாக இருக்க வேண்டிய கல்வியை சுமையாக மாற்றி விட்டார்கள். தமிழகத்தின் ஆட்சி காலம் முடிய ஒரு ஆண்டே இருப்பதால், உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பில்லை.

இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாகும். வங்கி பண பரிவர்த்தனை செல்போன் மூலம் செயல்படுத்தும் நிலைக்கு வந்துள்ளது. இது வசதியானவர்களுக்கே பயனாக அமையும். தமிழகத்தை பொறுத்தவரை சட்டம் சரியாக உள்ளது. ஒழுக்கம்தான்சரியில்லாமல் உள்ளது.

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். இந்த மரங்களில் பறவைகள் கூடு கூட கட்டாது. மேலும் யூகலிப்டஸ் என்ற தைல மரங்களையும் அகற்ற வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் மழை வளம் கிடைக்கும். மரங்கள் நடுவதற்கு பல கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படவில்லை. கேரளாவில் எங்கேயாவது காலி இடம் உள்ளதா? அதைப்போலவே தமிழகமும் பசுமையாக வர மரங்களை அதிகமாக நட வேண்டும்.

மழைவளம் பெருகி நீர்மட்டம் காப்பதற்கு மரங்கள் வளர்க்கப்பட வேண்டும். அரசு சட்டமே 100 மரங்கள் வளர்த்தால் அவற்றில் ஒன்றை மட்டும் அனுமதி பெற்று வெட்டிக் கொள்ளலாம் என்று உள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக பதவியேற்று இருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story