கன்னியாகுமரியில் துணிகரம் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 22 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை ; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கன்னியாகுமரியில் துணிகரம் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 22 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை ; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Sept 2019 4:30 AM IST (Updated: 12 Sept 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 22 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே உள்ள பூங்குளத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஆர்.எல். ராஜா என்ற ராஜபாண்டியன் (வயது 60). தி.மு.க.பிரமுகர். கடந்த சில மாதங்களாக ராஜபாண்டியன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த 4-ந்தேதி வேலூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர், அவர் அங்கு சிகிச்சை முடித்து பெங்களூருவில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், அப்பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் தினமும் ராஜபாண்டியன் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலையிலும் உறவினர் வழக்கம் போல் வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி ராஜபாண்டியனுக்கும், கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டியன் பெங்களூருவில் இருந்து விரைந்து வந்தார். வீட்டுக்கு சென்று பார்த்த போது, அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. படுக்கை அறையில் பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. அதில் இருந்த 22 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த கைகெடிகாரங்கள் மாயமாகி இருந்தன.

மர்ம நபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி ராஜபாண்டியன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைளை பதிவு செய்தனர். துப்புதுலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் ரெயில்நிலையம் வளாகம் வரை ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடிவருகிறார்கள்.

கேமரா மூலம் துப்புதுலக்குவதில் சிக்கல்

வீட்டில் யாரும் இல்லாததை நன்கு நோட்டமிட்ட மர்ம நபர்கள் நிதானமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். மேலும், ராஜபாண்டியன் வீட்டில் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் வீட்டின் பின் பக்க கேமராவை வேறு பக்கத்தில் திருப்பி விட்டு உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், அவர்கள் கேமராவில் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளை அடித்து சென்றனர். இதனால், கேமராவில் பதிவான காட்சிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Next Story