சென்னை விமான நிலையத்தில் ரூ.61½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.61½ லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.61½ லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசிய விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சுற்றுலா விசாவில் வந்த மலேசியாவை சேர்ந்த நூர்லீமா பிந்தி அப்துல்லா(வயது 40) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.23 லட்சம் மதிப்புள்ள 582 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
மடிக்கணினி
இதேபோல் மலேசியாவில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது ஹாரூன் ரசீத்(46), ரிஸ்வான் பசூல் ஹக்(31) ஆகியோரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட 20 மடிக்கணினிகள் இருந்தன. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது 2 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.26 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 669 கிராம் தங்கத்தையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூர்
மேலும் சிங்கப்பூரில் இருந்து மும்பை வழியாக சென்னை வந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக வந்த திருச்சியை சேர்ந்த விஜயராகவன்(35) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
விஜயராகவன் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் மலேசிய பெண் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.61 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 551 கிராம் தங்கத்தையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மலேசிய பெண் நூர்லீமா பிந்தி அப்துல்லாவை கைது செய்தனர். மற்ற 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story