சென்னையில் ஓணம் கொண்டாட்டம்


சென்னையில் ஓணம் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 7:03 PM GMT)

சென்னையில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை,

சென்னையில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஓணம் பண்டிகை

ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, வாமனராக வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமாக வழங்க மகாபலி சக்கரவர்த்தி ஒப்புக்கொண்டார்.

முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைக்க மகாபலி மன்னன் பாதாளத்துக்கு செல்வதாக நம்பிக்கை.

ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காணவேண்டும் என்ற மகாபலி மன்னனின் கோரிக்கைக்கு வாமனர் சம்மதம் தெரிவித்தார். இந்த நம்பிக்கையின்படி மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள்தான் திருவோண திருநாளாக கொண்டாடப்படுகிறது.

மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. சென்னையிலும் ஓணம் பண்டிகை பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள குருவாயூரப்பன், அய்யப்பன் கோவிலில் ஓணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. கோவில் முழுவதும் வண்ண மலர்களால் பெண்கள் அத்தப்பூ கோலம் போட்டனர்.

வீடுகளிலும் கொண்டாட்டம்

கோவிலுக்கு வந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கேரள கலாசார உடை அணிந்து வந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். சாமி தரிசனம் முடித்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டன.

தற்போது சபரிமலை நடை திறந்து இருப்பதால், ஓணம் பண்டிகையான நேற்று மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பலர் இருமுடிகட்டி சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து காலை 11.30 மணி அளவில் நடந்த ஓணம் சத்யா எனப்படும் அன்னதானம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் உள்ள வீடுகளிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் பல்வேறு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டும் ஓணப்பாட்டு பாடியும், ஓண ஊஞ்சல் ஆடியும், விஷூ கனி படையலிட்டும் பொதுமக்கள் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

Next Story