கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்து: தண்ணீர் குறைவாக இருந்ததால் உயிர் தப்பினோம் - மீட்கப்பட்ட பெண் பேட்டி
கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண், ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் உயிர் தப்பினோம் என்று கூறினார்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், இளங்கார்குடி, குடிகாடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 50 பேர் அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் மேலராமநல்லூர் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர், வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
ஆற்றின் நடுவில் தீவு போன்று உள்ள இந்த கிராமத்துக்கு படகில்தான் செல்ல வேண்டும். இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோர் மேலராமநல்லூர் கிராமத்துக்கு சிறிய படகில் சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் நேற்று மாலை 4 மணி அளவில் மேலராமநல்லூர் கிராமத்தில் இருந்து அதே படகில் 35-க்கும் மேற்பட்டோர் ஊர் திரும்பினர். ஆற்றின் நடுப்பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது திடீரென படகு, ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மணல் திட்டு பகுதியில் கரை ஏறினர். மீதி உள்ள 15-க்கும் மேற்பட்டோர் கவிழ்ந்த படகில் ஏறி நின்று உயிருக்கு போராடினர்.
இதைக்கண்ட மேலராமநல்லூர், இளங்கார்குடி, குடிகாடு, வடசருக்கை ஆகிய பகுதிகளை சேர்ந்த நீச்சல் தெரிந்த வாலிபர்கள் நீந்தி சென்று ஆற்றின் நடுவில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டனர்.
கருப்பூர் மேலத்தெருவை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் மனைவி வனிதா(வயது 35), மகள்கள் ராகவி(15), பவித்ரா(8), மகன் சரவணன்(7), இளங்கார்குடியை சேர்ந்த பார்வதி(55), மணலூரை சேர்ந்த தங்கராஜ்(67), பட்டுக்குடியை சேர்ந்த கோவிந்தராஜ்(55), கபிஸ்தலத்தை சேர்ந்த ராஜேஷ்(15), மேலகபிஸ்தலத்தை சேர்ந்த செல்வநாயகி(65), குடிக்காடு பகுதியை சேர்ந்த தேவிகா(55) உள்பட 15 பேரும் மீட்கப்பட்டனர்.
இவர்களில் வனிதா மற்றும் அவரது மகன், மகள்கள் ஆகிய 4 பேரை தவிர மற்றவர்கள் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன், நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் சதீஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சாமிநாதன், அறிவானந்தம், தாசில்தார் கண்ணன் மற்றும் பலர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
கொள்ளிடம் ஆற்றின் நடுவே தத்தளித்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 16 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மீட்கப்பட்டவர்களில் தஞ்சை மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கபிஸ்தலம், பாபநாசம், தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மேலராமநல்லூர் கிராமத்துக்கு திரும்பி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆற்றில் படகு கவிழ்ந்து மீட்கப்பட்ட மேலகபிஸ்தலத்தை சேர்ந்த செல்வநாயகி கூறியதாவது:-
ஆற்றின் நடுப்பகுதியில் நாங்கள் படகில் வந்து கொண்டிருந்தபோது அதிக எடை காரணமாக திடீரென படகு கவிழ்ந்தது. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் இல்லாததால் நாங்கள் உயிர் தப்பினோம்.
நீச்சல் தெரிந்த வாலிபர்கள் துரிதமாக செயல்பட்டு எங்களை காப்பாற்றினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலத்தில் ஆற்றில் மக்கள் பயணம் செய்யும் வகையில் அரசு பெரிய படகு வசதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story