மரம் வளர்ப்பின் மூலமே மண்வளத்தையும், மழைநீரையும் பாதுகாக்க முடியும் ; தர்மபுரியில் ஜக்கி வாசுதேவ் பேச்சு


மரம் வளர்ப்பின் மூலமே மண்வளத்தையும், மழைநீரையும் பாதுகாக்க முடியும் ; தர்மபுரியில் ஜக்கி வாசுதேவ் பேச்சு
x
தினத்தந்தி 12 Sept 2019 5:00 AM IST (Updated: 12 Sept 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

மரம் வளர்ப்பின் மூலமே மண்வளத்தையும், மழைநீரையும் பாதுகாக்க முடியும் என்று தர்மபுரியில் நடந்த விவசாயிகள், பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஜக்கி வாசுதேவ் பேசினார்.

தர்மபுரி,

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி ஆற்றுக்கு புத்துயிர் ஊட்டவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கினார். இது தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தலைக்காவிரியில் இருந்து மோட்டார்சைக்கிள் பயணம் தொடங்கிய அவர் நேற்று தர்மபுரி வந்தார். தர்மபுரி விஜய் மில்லேனியம் பள்ளியில் விவசாயிகள், பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகன், எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் மற்றும் அதிகாரிகளிடம் இந்த திட்டம் குறித்து விளக்கி பேசினார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள், விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் காவிரி கூக்குரல் இயக்க பதாகைகளை வெளியிட்டு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:- ஆறுகள், ஏரிகள், குளங்கள் மூலமாக நமக்கு கிடைப்பது மழைநீர் மட்டுமே. மழைநீரை மண்ணில் சேர்த்து வைத்தால் மட்டுமே அதை பாதுகாக்க முடியும். உலகில் ஓடும் அனைத்து ஆறுகளில் உள்ள தண்ணீரை விட 8 மடங்கு தண்ணீரை இந்த மண்பரப்பில் நாம் சேகரித்து வைக்க முடியும். மண்வளத்தை மீட்டெடுக்கவும், மழைநீரை சேகரிக்கவும் காவிரிகூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

மரம் வளர்ப்பின் மூலமாகவே மண்வளத்தையும், மழைநீரையும் பாதுகாக்க முடியும். மரம் வளர்க்கும் திட்டத்திற்காக கடந்த 8 நாட்களில் 112 நாடுகளில் இருந்து 2 கோடியே 7 லட்சம் மரங்கள் வந்து உள்ளன. உங்கள் குழந்தைகள் மீது உங்களுக்கு அன்பும், அபிமானமும் இருந்தால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு வளமான மண்ணையும், நல்ல தண்ணீரையும் நீங்கள் அளிக்க வேண்டும். வனத்துறையின் கீழ் உள்ள மரம் வளர்ப்பை வேளாண்மை துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். மரம் வளர்ப்பு திட்டத்தில் 12 ஆண்டுகள் உறுதியாக செயல்பாட்டால் இந்த இலக்கை நாம் அடைய முடியும். இவ்வாறு ஜக்கிவாசுதேவ் பேசினார்.

இதில் தொழிலதிபர்கள் டி.என்.சி. மணிவண்ணன், டி.என்.சி.இளங்கோவன் விவசாய சங்க தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story