திருமானூர் அருகே, கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்தது - 35 பேர் உயிருடன் மீட்பு


திருமானூர் அருகே, கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்தது - 35 பேர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 12 Sept 2019 4:00 AM IST (Updated: 12 Sept 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்றபோது படகு கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த 35 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மேலராமநல்லூர், கீழராமநல்லூர் கிராமங்களை சுற்றி கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்த கிராமங்களின் வட பகுதியில் மேம்பாலம் இருந்த போதிலும், அனைத்து தேவைகளுக்கும் அரியலூர் மாவட்டத்திற்கு செல்லாமல், அதனருகே தென்பகுதியில் உள்ள தஞ்சை மாவட்டத்திற்குத்தான் கிராம மக்கள் சென்று வருவார்களாம்.

மேலும் அந்த கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். தொழிலாளர்களும் அங்கு தான் வேலைக்கு சென்று வருகின்றனர். விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களை தஞ்சைக்கு கொண்டு சென்று தான் விற்பனை செய்கின்றனர். தஞ்சாவூருக்கு செல்வதற்கு மேம்பால வசதி இல்லாததால் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கொள்ளிடம் ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

தற்போது மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு ஓடுகிறது. இதனால், கிராம மக்கள் படகு மூலமாக தஞ்சைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மேலராமநல்லூர் கிராமத்தை சேர்ந்த 35 பேர் நேற்று மாலை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்வதற்காக ஒரு படகில் ஏறி பயணம் செய்தனர்.

மேலராமநல்லூரை தாண்டி சிறிது தூரம் சென்றபோது, படகு நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 35 பேரும் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடினர். அவர்களில் 20 பேர் நீச்சல் அடித்து ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஆனால், மீதமுள்ள 10 பேரை காணாததால், மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது தூரத்தில் அவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் 35 பேரும் அங்குள்ள மணல் திட்டில் ஏறி நின்று தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதனால், கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட கலெக்டர் வினய், கபிஸ்தலம் தீயணைப்பு நிலையத்தினர், தூத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 35 பேரையும் படகுகள் மூலம் மீட்டனர். 35 பேரையும் உயிருடன் பார்த்தபிறகே கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்றபோது படகு கவிழ்ந்ததில், 35 பேர் தண்ணீரில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story