திருக்கனூர் அருகே ருசிகர சம்பவம்: கவர்னரை புகழ்ந்து பாடிய மூதாட்டி


திருக்கனூர் அருகே ருசிகர சம்பவம்: கவர்னரை புகழ்ந்து பாடிய மூதாட்டி
x
தினத்தந்தி 12 Sept 2019 3:45 AM IST (Updated: 12 Sept 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே கவர்னர் கிரண்பெடியை நாட்டுப்புற பாடல் மூலம் மூதாட்டி ஒருவர் புகழ்ந்து பாடினார்.

திருக்கனூர், 

திருக்கனூர் அருகே சோம்பட்டு கிராமத்தில் கவர்னர் கிரண்பெடி கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு பகுதியில் உள்ள ஏழை முத்துமாரியம்மன் கோவில் குளத்தை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் கிராம மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ரூ.7 லட்சம் செலவில் கோவில் குளத்தை சீரமைக்க கவர்னர் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து குளம் ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன.

சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் குளத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு டி.பி.ஆர். செல்வம் தலைமை தாங்கினர். கவர்னர் கிரண்பெடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குளத்தின் முகப்பில் அமைக்கப்பட்டு இருந்த கல்வெட்டை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

மேலும் குளத்தின் கரையில் மரக்கன்றுகள் நட்டு, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா வழங்கினார். இதன்பின் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், இளநிலை பொறியாளர் சாந்தன், கிராம முக்கிய பிரமுகர்கள் ராஜி, மோகன், தில்லைக்குமார் மற்றும் தொண்டு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது அங்கு நின்றிருந்த சரோஜா என்ற மூதாட்டி, கவர்னர் கிரண்பெடியை புகழ்ந்து நாட்டுப்புற பாடல் பாடினார். இதை கவர்னர் ரசித்து கேட்டதுடன், அவரை பாராட்டினார். இந்த ருசிகர சம்பவத்தை அங்கிருந்தவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story